எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு இடையூறு ஏற்படும் என, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை, மக்களைச் சந்திக்கவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.
டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா பார்வையிட்டு உதவிகளைச் செய்துவருகிறார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருமெய்ச்சூரில் மக்களைச் சந்தித்து ஆறுதல்கூறி நிவாரணப் பொருட்களை வழங்கியவர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட வந்தார்.
சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டாரம் முழுவதும் பெய்த கனமழை வீடுகள், விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆய்வு செய்து பள்ளிகளில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பாய்,போர்வை போன்றவற்றை வழங்கினார்.
பின்னர், சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்வையிட வந்தவரை, உள்ளே விடாமல் போலீசார் தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்பினர். "முதல்வர் வருகை இருப்பதால் உள்ளே செல்லமுடியாது, மக்களைப் பார்ப்பதற்கு அனுமதி இல்லை" எனத் தெரிவித்து அனுப்பிவிட்டனர்.
அங்கிருந்து திரும்பிய பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கனமழையால் சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டாரம் முழுவதும் கடுமையாக வீடுகள், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகளை முழுமையாகத் தூர்வார வேண்டும். டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் உள்ளது. இது கார்ப்பரேட் பீர் மதுபானம் தயாரிக்கும் கம்பெனிகளின் தூண்டுதல் இருக்கிறது. மேலும், மத்திய அரசு 9 கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் விவசாயிகள் உடன்படவில்லை. மத்திய அரசிடம் விவசாயிகள் பேச்சுவார்த்தை செய்து குறைகளைக் கூற வேண்டும். சுமூக முடிவாகத் தீர்வுகாண வேண்டும்" என்றார்.