![Chidambaram, trade unions published a book demanding political parties](http://image.nakkheeran.in/cdn/farfuture/5cGcZY92QDaT7VRDwdPr3_p54bBIEcMBWOvskHbPjEs/1711081913/sites/default/files/inline-images/3_234.jpg)
சிதம்பரம் மேல வீதியில் சிதம்பரம் வர்த்தகர் சங்கம் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் கோரிக்கைகள் அடங்கிய நூல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் வர்த்தகர் சங்க செயலாளர் அப்துல் ரியாஸ், துணைத் தலைவர்கள் கணேஷ், வெங்கடசுந்தரம், பழனிசாமி, ஞானசேகரன், சமூக ஆர்வலர் செங்குட்டுவன் உள்ளிட்ட வர்த்தக சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் வர்த்தகர் சங்கத்தின் சார்பாக அரசியல் கட்சியினருக்கு, ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வறுத்த நிலக்கடலைக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்; பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்; மாநிலம் தோறும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்; மாட்டுத் தீவனத்திற்கு பயன்படுத்தப்படும் புண்ணாக்கு வரியை நீக்க வேண்டும்; பிஸ்கட்டிற்கு தற்போதுள்ள 18% வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்; உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகிய அனைத்திற்கும் ஒரே விதமாக 5 சதவீத வரியை அறிவிக்க வேண்டும்.
வேளாண் விளைபொருட்களுக்கு கையூட்டு பெறுவதை தடுக்க வேண்டும்; மழைக் காலங்களில் வெள்ள நீர், உபரி நீர் கடலில் சென்றடையாமல் அனைத்து நதிகளும் இணைக்கப்பட வேண்டும்; விவசாயம் செழிக்க நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுக்கும் தற்போதுள்ள ஆறுகளில் தகுந்த இடங்களில் தேவையான ஒரு செக்டேம் அமைத்து நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
சிதம்பரத்தில் காட்சிப் பொருளாக உள்ள போக்குவரத்து சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சிதம்பரம் நகர நடைபாதைகளை மக்கள் நடப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் நடப்பதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். சிதம்பரம் நகரம் எங்கும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி முழுமையாக அகற்றப்பட வேண்டும்.
சிதம்பரம் நகரில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உடனடியாகத் துவங்கப்பட வேண்டும். கொள்ளிடம் கரையோர கிராமங்களில் அடிக்கடி முதலைகளால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க முதலைப் பண்ணை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.