தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது குழந்தைத் திருமண குற்றச்சாட்டுகள் எழுந்த விவகாரத்தில் சில கருத்துகளைக் கூறியிருந்தார். ஆளுநரின் இந்த கருத்துகள் சர்ச்சை ஆன நிலையில் தமிழக டிஜிபி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
டிஜிபி அளித்துள்ள விளக்கத்தில், “பழி வாங்கும் நோக்குடன் சமூக நலத்துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது குழந்தைத் திருமண குற்றச்சாட்டுகள் வைத்ததாகவும், அதன் அடிப்படையில் உறவினர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், 6 - 7 ஆவது வகுப்பு மாணவியர் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் இரு விரல் கன்னி பரிசோதனை செய்ததாகவும், இதனால் சிறுமியர் சிலர் தற்கொலை செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் ஆகும்.
குழந்தைத் திருமணம் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில் அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்த பின்னர், அதற்கான ஆதாரங்களை திரட்டிய பின்பு சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் ச/பி 366(A) இ.த.ச மற்றும் குழந்தைத் திருமண சட்டப் பிரிவு 9, 10இன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றத்தில் தொடர்புடைய 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி இரண்டு சிறுமிகள் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் பெண் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். ஆனால், அவர்கள் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அந்தச் சிறுமியர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பது பொய்யான தகவல். அது போன்ற நிகழ்வு நடந்ததாக தகவல் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.