கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி 33 வார்டு பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு 1969 ஆம் ஆண்டு முதன் முதலில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரபெற்று அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் அத்திட்டம் வடிவமைக்கப்பட்டு தற்போது வரை செயல்பாட்டில் உள்ளது. நகரின் மக்கள் தொகைக்கு ஏற்றார் போல் தற்போது செயல்பட்டு வரும் இத்திட்டம் போதுமானதாக இல்லாத காரணத்தினால் புதிய பாதாள சாக்கடை திட்டம் ரூ.75 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியத்தின் மூலம் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இப்பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
தற்பொது இயங்கி வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் நகரின் 31 வார்டு பகுதிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. புதிய பாதாள சாக்கடை திட்டமானது நகரின் 33 வார்டு பகுதிகளிலும் செயல்படும். அதுபோல் தற்போது உள்ள திட்டத்தில் நகர் முழுவதும் 960 ஆள் நுழை கிணறு (மேனுவல்) உள்ளது. அது தற்போதைய புதிய திட்டத்தில் 2143 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய திட்டத்தில் நகரில் 3 இடங்களில் மட்டுமே கழிவு நீர் வெளியேற்று நிலையம் செயல்பாட்டில் உள்ளது.
அதனையும் தற்போதைய புதிய திட்டத்தில் 5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர்கள் லால்புரம் ஊராட்சி மணலூரில் நகராட்சிக்கு சொந்தமான புல்பன்னை அருகே சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரபெற்று அங்கு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஒரு மாத காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடித்திட நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, நகராட்சி பொறியாளர் மகாதேவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மதியழகன் மற்றும் அதிகாரிகளிடம் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் பாண்டியன் பொதுமக்களின் நலன் கருதி வலியுறுத்தி சம்பந்தபட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து மணலூரில் அமைக்கப்பட்டுள்ள பாதளசாக்கடை திட்டத்தின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்எல்ஏ பாண்டியன் தலைமையில் ஆய்வு செய்தனர். இதில் முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், முன்னாள் நகரமன்ற தலைவர் குமார், முன்னாள் துணைத் தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள் சந்தர்ராமஜெயம், ஜெயசீலன், லதா ராஜேந்திரன், திருவேங்கடம், பிரிதீவி, தமிழ்நாடு மின்சார வாரிய செயற் பொறியாளர் ஜெயந்தி, உதவி செயற் பொறியாளர் அசோக் பிரசன்னா, உதவி பொறியாளர் கவிதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள் பென்ன நிகோலட் ஜாய், சூரியா, நகராட்சி மேற்பார்வையாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் பால் டேவிஸ், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், தூய்மை பணி மேற்பார்வையாளர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.