Skip to main content

சிதம்பரம் வட்டாரப் பகுதிகளில் விளைநிலங்கள் வெள்ளக்காடாக மாறியது

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

In Chidambaram locality, arable lands turned into flooded

 

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாகவே பலத்த கனமழை தொடர்ச்சியாகப் பெய்து வந்தது. இதனால் தேங்கிய மழைநீரால் சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு, நாற்றங்கால் என நெற்பயிர்கள் 2 ஆயிரம் ஏக்கர்களுக்கும் மேல் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.

 

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக கனத்த மழை கடந்த இரண்டு நாட்களாகப் பெய்தது. இதனால் சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலம், வசபுதூர், நடராஜபுரம், கனகரபட்டு, சித்தலப்பாடி, தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், கோவிலாம்பூண்டி, தில்லைவிடங்கன் மற்றும் கொள்ளிடக்கரை பகுதிகளில் உள்ள வேலக்குடி, அகரநல்லூர், வல்லம்படுகை, சிவபுரி, பெரம்பட்டு, திட்டுக்காட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழக்குண்டலப்பாடி உட்பட பரங்கிப்பேட்டை, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் நடவு, நேரடி நெல் விதைப்பு, நாற்றங்கால் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களான பருத்தி, மரவள்ளி, வாழை, வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட பயிர் வகைகளும் 2 ஆயிரம் ஏக்கர்களுக்கும் மேல் மழைநீரால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

 

In Chidambaram locality, arable lands turned into flooded

 

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை இரவு வரை பெய்த தொடர் மழையால் வீராணம் ஏரியின் முழுக்கொள்ளளவை எட்டி அதன் உபரிநீர் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வெள்ளியங்கால் ஓடை வழியாகத் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது விளைநிலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி வருகிறது. ஏற்கனவே மழைநீரால் மூழ்கியிருந்த நெற்பயிர்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களில் தற்போது கூடுதலாக வீராணம் ஏரியின் தண்ணீரும் தேங்குவதால் விவசாயிகள் பெரும் சோகத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனையறிந்த வேளாண்துறை அலுவலர்கள் மாவட்ட இணை இயக்குநர் ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் நந்தினி உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட விளைநிலங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களிலும், மழை இல்லாத நேரங்களில் கூட காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையாலும் இந்தப் பகுதி பாதிப்படைகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.