அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான 'நியூயார்க் டைம்ஸ்' சென்னை குடிநீர் பஞ்சம் குறித்த செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக தலைநகரான சென்னையில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்த படியே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளன. மேலும், பல ஓட்டல்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்கலும் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளன. தண்ணீருக்காக தமிழகமே தவித்து வரும் நிலையில், எப்போது மழை பெய்யும் என வானத்தை ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர் பொதுமக்கள்.
மேலும், தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள தண்ணீர் பிரச்சினை குறித்து அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் செயற்கைக்கோள் புகைப்படத்தை மையமாக வைத்து "நியூயார்க் டைம்ஸ் இதழ்" சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சம் குறித்து சிறப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில், 2018 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவோடு, 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கடந்த ஞாயிறுக்கிழமை அன்று எடுக்கப்பட்ட புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவு ஒப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 46 லட்சம் மக்களுக்கு புழல் ஏரி தண்ணீர் வழங்குகிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது அதன் படி, 2018 ஆம் ஆண்டில் புழல் ஏரியின் நீர் இருப்பு அளவில் மிக அதிகமாகவும், தற்போது மிகவும் வறண்ட நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதே போன்று, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு அளவும் அபாயகரமான நிலையில் இருக்கிறது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.