சென்னை கிழக்கு மண்டல காவல் துறை இணை ஆணையர் ஜெயகவுரியின் நடவடிக்கைகளால் கடும் மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் சென்னை காவல் துறையினர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிகள் அமலானதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள் அனைவரும் அரசு வாகனங்களை பயண்படுத்த தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரசு சலுகைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டிலிருந்து வெளியே எங்கு கிளம்பிச்சென்றாலும் அவர் செல்லும் வழிகளில் பாதுகாப்பிற்காக காவல்துறையினரை நிற்க வைக்கும் அவலம் தொடர்கிறது.
நேற்று (11.3.2019) கிரின்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்து ராயப்பேட்டையிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சென்று வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. காலை 11 மணிக்கு எடப்பாடி புறப்படும் நிலையில், காலை 7 மணிக்கே 300 -க்கும் மேற்பட்ட காவலர்களை பாதுகாப்புக்காக வழி நெடுகிலும் நிறுத்தி வைத்துள்ளார் ஜெயகவுரி.
காலையிலேயே டூட்டிக்கு வந்ததால் பணிகளுக்கிடையே சாப்பிட்டுக்கொள்ளலாம் என நினைத்து வந்துள்ளனர். ஆனால், அவர்களை சாப்பிடச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், சாலையில் நின்றுகொண்டே பலரும் சாப்பிட்டிருக்கிறார்கள். முற்பகல் 11 மணிக்கு எடப்பாடி கிளம்பி சென்றபோதும், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள அனுமதிக்கவில்லை ஜெயகவுரி. அட்டென்ஷன் பொசிசனில் நிற்க வேண்டும் என கடுமையாக உத்தரவிட்டிருக்கிறார்.
அதே போல, 2 மணிக்கு மேலே வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார் எடப்பாடி. அதன்பிறகாவது மதியம் சாப்பாட்டுக்கு அனுமதிப்பார் என எதிர்பார்த்தனர் காவலர்கள். அனுமதிகிடைக்கவில்லை. காலையில் போலவே 3 மணிக்கு மேலே மதிய சாப்பாட்டையும் சாலையில் நின்று கொண்டே சாப்பிட்டிருக்கிறார்கள். சரி, எடப்பாடி தான் வீட்டிற்கு திரும்பிவிட்டாரே , இனி கான்வாயை கேன்சல் செய்துவிடுவார் என காவலர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், ஜெய கவுரியோ, " மாலையில் முதல்வர் மீண்டும் வெளியே கிளம்புகிறார். அதனால் பாதுகாப்பு அப்படியே இருக்கட்டும் " என அவர் உத்தரவிட்டதால் நொந்து போனார்கள் காவலர்கள். மேலும், இயற்கை உபாதைகளுக்கும் அவர்களை அனுமதிக்கவில்லை. இதில் பெண்காவலர்களின் துயரங்கள் ஜீரணிக்க முடியவில்லை. மாலையில் கிளம்பி வெளியே சென்ற எடப்பாடி இரவு வெகுநேரம் கழித்துத்தான் வீடு திரும்பியுள்ளார். அதுவரை பாதுகாப்பு பணியில் நின்றபடியே இருந்தனர்.
இதனால் ஏகத்துக்கும் நொந்து போனார்கள் காவலர்கள். நேற்றைய தினம் போலவே, இன்றும் அதேபோல கெடுபிடி காட்டியுள்ளார் ஜெயகவுரி. மேலும், எடப்பாடி செல்லும் பாதையில் வீடுகள் திறந்திருக்கக்கூடாது, சாலையில் நின்றுகொண்டு ஃபோன் பேசக்கூடாது, வீட்டு ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் கடுமையாக கெடுபிடிகாட்டி வருகிறார் ஜெயகவுரி. முதல்வருக்கு பாதுகாப்புங்கிற பேரில் ஜெயகவுரி தரும் கெடுபிடிகளால் மன உளைச்சல்களில் தவித்து வருகின்றனர் காவலர்கள்.