உலகம் முழுவதும் நாளை மறுநாள் (01-01-24) ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளது. 2024ஆம் ஆண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வருகின்றனர். பல்வேறு முக்கிய நகரங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது நாளை (31-12-23) இரவே தொடங்கிவிடும். குறிப்பாக சென்னையில் நாளை (31-12-23) இரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்ட உள்ளது. அதே வேளையில், இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்கவும், மக்கள் அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடவும் சென்னை காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் இன்று (30-12-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், “நாளை இரவு முதல் சென்னை மாநகரில் மொத்தம் 18,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர, 1,500 ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்கக் கூடாது. அதையும் மீறி, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோரை கண்காணிக்க 20 இடங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மது அருந்தியவர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது. அவர்கள், வாடகை வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்த வேண்டும். மெரினா உள்பட முக்கிய கடற்கரையில் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளதால், புத்தாண்டையொட்டி கடலில் மக்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை சாலையில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.
இவற்றை கண்காணிக்க சென்னை மாநகரம் முழுவதும் தானியங்கி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன்படி, 6,481 அதிநவீன தானியங்கி கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவலின் அடிப்படையில் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மற்றும் சாகசங்களில் ஈடுபடுபவர்களின் வாகன ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும். நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். தனியார் விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.