தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் உள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (20/02/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மெட்ரோ ரயில் சேவையைப் பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிகைகளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் கீழ்க்கண்டவாறு குறைக்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதன்படி, 0- 2 கி.மீ. வரையிலான கட்டணத்தில் மாற்றமில்லை. 2 கி.மீ. முதல் 4 கி.மீ. வரை ரூபாய் 20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி அந்த கட்டணத்தில் 5 கி.மீ. வரை பயணிக்கலாம். 4 கி.மீ. முதல் 6 கி.மீ. வரை ரூபாய் 30, 6 கி.மீ. முதல் 12 கி.மீ. வரை ரூபாய் 40 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூபாய் 30 கட்டணத்தில் 12 கி.மீ. வரை பயணிக்கலாம். 12 கி.மீ. முதல் 18 கி.மீ. வரை ரூபாய் 50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 21 கி.மீ. வரை 40 ரூபாய் கட்டணத்திலேயே பயணிக்கலாம். 24 கி.மீ. வரை ரூபாய் 60, 24 கி.மீ.க்கு மேல் ரூபாய் 70 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 32 கி.மீ. வரை ரூபாய் 50 கட்டணத்தில் பயணிக்கலாம்.
க்யூ.ஆர். கோடு (QR CODE) மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொடுதல் இல்லா மதிப்புக் கூட்டுப் பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு, மேலும் கூடுதலாக அனைத்துப் பயணச் சீட்டுகளுக்கும் அடிப்படை கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.
ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம்- தற்போதுள்ள ஸ்டேஜ்-1 இன் 45 கி.மீ வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம், ரூபாய் 100 ஆகும். தற்போது, துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ. வழித்தடத்திற்கும் அதே 100 ரூபாயாகவே இருக்கும்.
ஒரு மாதம் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம்- தற்போதுள்ள ஸ்டேஜ்-1 இன் 45 கி.மீ. வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் 2,500 ரூபாய் ஆகும். தற்போது, துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ. வழித்தடத்திற்கும் அதே 2,500 ரூபாய் கட்டணம்தான்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்திலிருந்து 50% தள்ளுபடி. (வரையறுக்கப்படாத பயண அனுமதிச் சீட்டுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நாட்களில் செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டுகள் நீங்கலாக) இந்த ஆணை, 22/02/2021 அன்று முதல் அமலுக்கு வருகின்றது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த கட்டணக் குறைப்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களது பயணங்களைக் குறைந்த செலவில், நிறைவாக மேற்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்" இவ்வாறு முதல்வர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.