ஆவின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பிலுள்ள உயரதிகாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று பரவியிருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், ஆவின் நிர்வாகம் கீழ்க்கண்ட விளக்கத்தை அளித்துள்ளது.
அரசு சார்ந்த நிறுவனமான ஆவின், அரசு வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் மேற்கொள்கிறது. அனைத்துப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களைப் பண்ணைக்குள் அனுப்பும் முன்னர், தெர்மல் ஸ்கிரீனிங் எனப்படும் வெப்பமானி கொண்டு, அவர்களது உடலின் வெப்ப நிலை அறியப்படுகிறது. அதன்பிறகு, தகுதியான நபர்கள் மட்டுமே பணிசெய்ய அனுப்பப்படுகின்றனர்.
மேலும் அனைத்து ஊழியர்களுக்கும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கும், மாஸ்க், கையுறை, சானிடைசர் போன்ற சுகாதார நடவடிக்கைகள், அரசு வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு பணியில் உள்ள அனைவருக்கும் கபசுரகுடிநீர் 50 மில்லி தினமும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மாதவரம் பால் பண்ணையில் ஒரு நபர் கரோனா தொற்றுநோயால் இறந்துள்ளார் என்பது உண்மை. அவர் கடந்த ஆண்டு நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டு ஒரு மாதம் விடுப்பில் இருந்தவர். அந்த நபருக்குத்தான் தொற்றுநோய் ஏற்பட்டது. அதுவும், பால்பண்ணையில் ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை.
இரவும் பகலும், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை நண்பர்கள் ஆகியோர் போல, ஆவின் ஊழியர்களும், அலுவலர்களும் ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் பொதுமக்களுக்கு பால் கிடைத்திட உழைத்து வருகிறார்கள். கரோனா போன்ற மிகவும் சிரமமான காலங்களில், அனைத்துப் பணியாளர்களும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மக்களுக்காக உழைக்கும் யாவரும் மகத்தானவர்களே!