கரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்கக் கோரியும், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் கரோனா தொற்று அச்சத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், சத்துணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு முட்டைகளைத் தொடர்ந்து வழங்குவது குறித்தும், மாணவிகளுக்கு நாப்கின் தொடர்ந்து வழங்குவது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்று இந்த வழக்கின் விசாரணையில், தமிழகத்தில் அனைத்து மாணவர்களையும் அழைத்து முட்டை வழங்க சாத்தியமில்லை எனத் தமிழக அரசு பதிலளித்திருந்தது. பள்ளிகளில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால் முட்டை வழங்குவது சாத்தியமில்லை, ஏப்ரல் முதல் ஜூலை வரை மாணவிகளுக்கு 21.50 லட்சம் நாப்கின்கள் வழங்கப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு பதிலளித்திருந்தது.
மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது என்றால் டாஸ்மாக்கை மூட வேண்டியதுதானே. டாஸ்மாக்கில் தனிமனித இடைவெளியுடன் மது விற்கும் போது மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாதா? எனக் கேள்வியெழுப்பிய நீதிபதிகள் முட்டை வழங்கும் திட்டம் உள்ளதா என்பதை அரசு நாளை தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.