Skip to main content

'சுங்கக் கட்டணம் நியாயமாக இல்லை' - உயர்நீதிமன்றம் அதிருப்தி!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

chennai high court toll plazas fees national high way authority of india

 

ஒப்பந்தக் காலம் நிறைவடைந்த பிறகும், இரு சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதற்குத் தடைகோரியும் ஜோசப் சகாயராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு இன்று (08/04/2021) தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது விசாரித்த நீதிபதிகள், "தமிழக சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை. அதிக கட்டணம் வசூலிக்க முடியாது. சுங்கச்சாவடி கட்டண வசூலிப்பில் தேசிய அளவிலான கொள்கையைப் பின்பற்ற வேண்டும். ஃபாஸ்டேக் பெறும் நடைமுறை சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் முறையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நெடுஞ்சாலையை வாகன நெருக்கம் இல்லாத வகையில் மாற்றவேண்டும் எனத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அறிவுறுத்தி வழக்கை ஒத்தி வைத்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ரத்து!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Cancellation of fee increase at toll booths

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயரும் எனவும் கூறப்பட்டது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த கட்டண உயர்வு குறித்த அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.