தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், சமீபத்தில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க நிர்வாகிகள், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அமைச்சர் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் எதிர்ப்பு எழுந்தாலும், மற்றொரு புறம் உதயநிதி ஸ்டாலினுக்கு பலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.
இதனையடுத்து, திருவாரூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துக்களை பகிரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபத் சேஷசாயி முன் விசாரணைக்கு வந்த போது, கல்லூரி வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சனாதன தர்மத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
அதில் அவர், “ சனாதன தர்மம் என்பது இந்து மத வாழ்க்கை முறையில் விதிக்கப்பட்ட நித்திய கடமைகளின் தொகுப்பு. அதில், தேசத்திற்கும், அரசனுக்கும், பெற்றோருக்கும், குருக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளும் அடங்கும். இந்த கடமைகள் எல்லாம் அழிக்கப்பட வேண்டுமா?.
பேச்சு சுதந்திரம் அடிப்படை உரிமை என்றாலும், அது மதம் சார்ந்த விஷயங்களில் வெறுப்பு பேச்சாக மாறக் கூடாது. ஒவ்வொரு மதமும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எனவே, மதம் தொடர்பான விஷயங்களில் பேசும் போது யாருக்கும் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். பேச்சு சுதந்திரம் வெறுக்கத்தக்க பேச்சாக இருக்கக் கூடாது” என்று கூறினார்.