கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்த எம்.ஜி.எம். மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் சார்பில் வழக்கறிஞர் டி.ஆர் பிரபாகரன், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஜூலை மாதம் 25- ஆம் தேதி அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் எனது (கணேஷின்) தந்தை குமாரை அனுமதித்து, வெவ்வேறு தேதிகளில் 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், உரிய சிகிச்சை வழங்காததால், கடந்த ஆகஸ்ட் 3- ஆம் தேதி இறந்துவிட்டார்.
அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய்தான் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், எந்த விதிகளையும் பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலித்ததோடு, உடலை ஒப்படைக்க வேண்டுமென்றால் மீண்டும் 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டுமென நிர்பந்தப்படுத்தி, மொத்தமாக 10 நாளைக்கு 7 லட்சத்து 2 ஆயிரத்து 562 ரூபாய் வசூலித்துள்ளனர்.
இது தவிர, தன் தந்தையின் மருத்துவச் செலவை இன்சூரன்ஸ் மூலம் பெற, காப்பீட்டு நிறுவனத்தில் கோர ஏதுவாக மருத்துவ விவரங்களைக் கேட்ட நிலையில், தனது தந்தையின் மருத்துவ விபரங்களுக்குப் பதிலாக, வேறு ஒருவரின் சிகிச்சை விவரங்களை வழங்கினர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்ட போது கொலை மிரட்டல் விடுத்தனர்.
எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துக்கு மனு அளித்த நிலையில், அந்த மனு மீது விசாரணை நடத்த சென்னை மாவட்ட ஆட்சியருக்கு ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை செய்தும், இதுவரை முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்த தொகையை திரும்ப தர வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.