குட்கா ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தடையை மீறி, சட்டவிரோதமாக குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்று அனுமதித்தது தொடர்பாக, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க கோரி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, குட்கா விற்பனையில் பல முறைகேடுகள் நடைபெற்றதால் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது.
அதேபோல, குட்கா விற்பனை ஏஜென்ட் ஒருவரிடமிருந்து கைபற்றப்பட்ட டைரியில், குட்கா விற்பனைக்காக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லட்ச கணக்கில் கையூட்டு வழங்கப்பட்டது குறிப்பிடப்பட்டதாக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் இன்று தீர்ப்பு வழங்கினர். அதில், குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இது சமூகத்திற்கு எதிராக குற்றம் இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதால் தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. மத்திய மாநில அரசுகளின் அதிகாரிகள் தொடர்புடைய நிலையில் சிபிஐக்கு உத்தரவிடுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.