டிஜிட்டல் ஊடகங்களைக் கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் ஊடகங்களைக் கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்குத் தடை கோரி கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை இன்று (16/09/2021) விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, "மத்திய அரசு கண்காணிப்பு மூலம் கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல். தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை நீதிமன்றம் விதித்த தடை நாடு முழுவதற்கும் பொருந்தும். ஊடகங்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாக இருந்தால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் இல்லாமல் போய்விடும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், "அனைத்து நீதிமன்றங்களிலும் தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.
இதற்குத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்காவிடில் வரும் அக்டோபர் மாதம் வழக்கை விசாரிக்கிறோம் என்று கூறி, டிஜிட்டல் ஊடகங்களைக் கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.