உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485 ஆக உள்ள நிலையில், மார்ச் 24ஆம் தேதி இண்டிகோ, ஏர் ஏசியா விமானங்களில் சென்னை வந்தவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கடந்த மார்ச் 24ம் தேதி, டெல்லியில் இருந்து சென்னைக்கு அதிகாலை 03:15க்கு கிளம்பிய இண்டிகோ விமானம் (6E-2403) மற்றும் மாலை 06:25க்கு கிளம்பிய ஏர் ஏசியா விமானம் (I5-765) ஆகிய விமானங்களில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பயணித்த நாளில் இருந்து 28 நாட்கள் உங்களை வீட்டுக்குள்ளேயே தனிமைபடுத்திக்கொள்ளுங்கள். ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரை அணுகுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.