எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று (மே 6, 2018) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 170 மையங்களில் 1.07 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஒ பள்ளியில் நீட் தேர்வு எழுத மாணவ மாணவிகள் காலையிலேயே பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்தனர். தேர்வர்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. கைக்கடிகாரம், ஷூ அணியவும், செல்போன், கால்குலேட்டர், காகிதங்கள், பேனா உள்ளிட்ட பொருள்களை எடுத்துச்செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் உடை கட்டுப்பாடுகளும் கடுமையாக விதிக்கப்பட்டு இருந்தன. பல மாணவிகள் கொலுசு, கம்மல், செயின் உள்ளிட்ட நகைகளை அணிந்து வந்திரு ந்தனர். அவற்றை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அகற்றிவிட்டு உள்ளே செல்லும்படி கூறினர். மாணவர்களின் மீசை மற்றும் தலைமுடிகளிலும், மாணவிகளின் தலைமுடிகளிலும் டார்ச் லைட் அடித்து பார்த்து சோதனை செய்தது தேர்வு மையத்திற்கு வந்திருந்த பெற்றோர்களை மிகவும் கவலையடைய வைத்தது.