சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு நள்ளிரவில் இ - மெயில் ஒன்று வந்துள்ளது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் குழு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனைக்குப் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் எனத் தெரியவந்தது. சென்னை விமான நிலையத்திற்குக் கடந்த 2 வாரத்தில் 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் இதுவாகும். இந்த வெடிகுண்டு புரளியைக் கிளப்பும் மர்ம நபர்கள் குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு நேற்று (16.06.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தின் பயணிகள் தங்கும் அறைகள், தண்டவாளங்கள், ரயில்வே நடைமேடைகள், பயணிகள் பொருட்கள் வைக்கும் இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக திருநெல்வேலியின் பல்வேறு பொது இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதே சமயம் இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான விசாரணையில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சிவபெருமாள் (வயது 42) என்பவரை நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.