திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியினை சார்ந்தவர் முத்து மகேஸ்வரி. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்காக வரவழைக்கப்பட்டு பின் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு பாஸ்போர்ட்டை பறிகொடுத்து நிராயுதபாணியாக விடப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரது நிலை அறிந்து தமிழ்நாட்டைச் சார்ந்த மேலும் சில ஏஜெண்டுகள் இவரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சுரண்டி துன்புறுத்தி இருக்கிறார்கள்.
மகேஸ்வரி துபாயில் உணவு உட்கொள்வதற்கு உணவும் இல்லை, செய்வதற்கு வேலையும் இல்லை, நாட்களை கழிக்க பணமும் இல்லை ஊருக்கு திரும்பி செல்ல பாஸ்போர்ட்டும் இல்லை என்ற அவல நிலையில் பல நாட்களாக மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனை சமூக ஆர்வலர்கள் மூலம் அறிந்த அன்வர் அலி என்ற நபர் தனது நிமிர் அறக்கட்டளையின் மூலமாக முத்து மகேஸ்வரிக்கு தேவையான அத்துணை உதவிகளையும் ஆவணங்கள் இல்லாமல் தங்கியதற்கான அபராத கட்டணம் ,பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்க தற்காலிக பயண அட்டை (Outpass)இந்திய அரசு ஆவணம், விமான பயண டிக்கெட் உட்பட ஊருக்கு செல்வதற்கான அனைத்து ஆவணங்களை தயார் செய்து உதவி கொடுத்து சொந்த ஊருக்கு திரும்பும் வரை அவருக்கு தேவையான உதவிகளையும் செய்துகொடுத்திருக்கிறார்.
மேலும் இன்று(2.7.2023) காலையில் முத்து மகேஸ்வரியை துபாய் விமான நிலையத்திற்கு நேராக வந்து வழியனுப்பிவைத்திருக்கிறார் அன்வர் அலி. இதையடுத்து நிமிர் அறக்கட்டளையின் தலைவர் அன்வர் அலிக்கு கண்ணீர் மல்க முத்து மகேஸ்வரி நன்றி தெரிவித்தார். மேலும் மகேஸ்வரி அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் இன்னும் பல்வேறான ஏழை பெண்களை ஏமாற்றி சுரண்டி வருவதை அறிந்த அன்வர் அலி அவர்கள் சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் அவரை துன்புறுத்திய துபாயில் உள்ள ஏஜென்ட்கள் என அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி நீதி கிடைக்க தமிழக அமைச்சர்கள் மூலமாக தமிழக முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்று சட்ட போராட்டத்தை நிமிர் குழுவினர் முன்னெடுப்பார்கள் என்றும் அன்வர் அலி மகேஸ்வரிக்கு உறுதியளித்துள்ளார்.