இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. நாளை பிரதமர் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் டெல்லியில் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதிமாறன் உட்பட புதிதாக தேர்வான 21 திமுக எம்பிக்கள் பங்கேற்றனர்.
திமுக எம்பிக்கள் கூட்டத்தில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடுத்தர மாணவர்களின் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; நீட் தேர்வு வேண்டாம் என்று கூறும் மாநிலங்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்; நீட் குறித்து என்.டி.ஏவில் உள்ள சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும்; நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட தேசத் தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும்; ஜூன் 14ல் கோவையில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்; நாடே திரும்பி பார்க்கும் வகையில் வெற்றி தந்த தமிழக மக்கள், வழி நடத்திய முதல்வருக்கு நன்றி; தமிழகத்தின் திட்டங்கள் உரிமைகளுக்கு நாடாளுமன்றத்தில் அயராது குரல் கொடுப்போம்' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.