Skip to main content

ஊரைவிட்டு ஓடுவதா? உயிரை விடுவதா? -தீக்குளிக்க முயற்சித்த மகாலட்சுமி!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

 

இன்னும்கூட, உள்ளாட்சித் தேர்தல் விவகாரங்கள் ஓய்ந்தபாடில்லை. விருதுநகர் மாவட்டம் – மூவரை வென்றான் கிராமத்தில், ஊராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோற்ற முருகானந்தம் என்பவர், தன்னுடைய குடும்பத்தை தொடர்ந்து மிரட்டி வருகிறார் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தன்னுடைய மகன், மகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார், மகாலட்சுமி.  அசம்பாவிதம் ஏதும் நடக்கவிடாமல் காவல்துறையினர் தடுத்து அவரைக் காப்பாற்றினர்.  

 

 moovarai vendran



 

மகாலட்சுமியின் கொழுந்தன் ராமச்சந்திரன் நம்மிடம் “எங்க பஞ்சாயத்துல தலைவருக்குப் போட்டியிட்டு ஜெயிச்சவரு எங்க ஜாதி. அந்த முருகானந்தம் வேற ஜாதி. ஆரம்பத்துல இருந்தே முருகானந்தத்துக்கும் எங்களுக்கும் ஆகாது. அதனால, நாங்க எங்க ஜாதிக்காரருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிட்டோம்னு பிரச்சனைக்கு மேல பிரச்சனை பண்ணுறாரு முருகானந்தம். பொம்பளைய கையைப் பிடிச்சி இழுத்தோம்னு பொய்க் கேசு கொடுத்தாரு. அவரு கொடுத்த பொய் பெட்டிஷனை வாங்குறாங்க நத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்ல. நாங்க கொடுத்தா வாங்க மாட்டேங்கிறாங்க. எப்ப பார்த்தாலும் வசவு, பொய் பெட்டிஷன்னு எத்தனையத்தான் தாங்க முடியும்? அதனாலதான், தீக்குளிச்சி சாகணும்கிற முடிவோட எங்க அண்ணியாரும் குழந்தைகளும் இன்னைக்கு விருதுநகர் கலெக்டர் ஆபீசுக்கு வந்தாங்க. அதை நடக்கவிடாம பண்ணிட்டாங்க.  தீர விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக விருதுநகர் – சூலக்கரை போலீசார் சொல்லிருக்காங்க.” என்றார். 
 

ஊரை விட்டே ஓடவேண்டும் அல்லது உயிரை விடவேண்டும் என்ற பரிதவிப்பில் இருக்கும் மகாலட்சுமியும் அவரது குடும்பத்தினரும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்