/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks-bf-art_0.jpg)
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தைக் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தது இதனையடுத்து காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் எனக் கடந்த தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.07.2024) தொடங்கி வைத்தார்.
அதன்படி இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவிப் பெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தால் ஊரகப் பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி அவர்களுக்கு காலை உணவு வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உண்டார். அப்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு காலை உணவை ஊட்டி விட்டு அவர்களுடன் பேசியபடி முதல்வர் ஸ்டாலினும் உணவருந்தினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-mks-bf-mic-art.jpg)
அதனைத் தொடர்ந்து காலை உணவுத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பசியோடு பள்ளிக்குச் செல்லக்கூடாது. காலை உணவுத் திட்டத்தில் பரிமாறப்படும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது. காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது. இத்திட்டம் அரசுக்கு செலவு இல்லை. எதிர்கால தலைமுறையை உருவாக்கும் முதலீடு. இத்திட்டத்தின் மூலம் 20.73 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks-dashboard-art_0.jpg)
கடந்த 1975 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பற்றி நாடாளுமன்றத்தில் அரசியலுக்காக தற்போது கேள்வி எழுப்பும் மத்திய பாஜக அரசு, அந்த நேரத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாராக இருக்கிறதா?”எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை முதல்வரின் கண்காணிப்பு பலகை (CM DashBoard) வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)