இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “சென்னை, கோவை, மதுரை. திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 1000 இடங்களில் இலவச வைபை (Wifi) சேவை வழங்கப்படும். 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும். 2024 - 2025 நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளில் சிற்றுந்து சேவை திட்டம் விரிவுபடுத்தப்படும். ஜப்பான் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகளை கொள்முதல் செய்து இந்த நிதியாண்டில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். ரூ. 665 கோடியில் 14 புறவழிச் சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும். ரூ. 5718 கோடி மதிப்பிலான 6071 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை கட்டப்படும். இரண்டு பேரிடர்கள் மாநில அரசின் நிதி நிலைமையை சிக்கலாக்கியுள்ளன. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு இன்னும் நிதி வழங்கவில்லை. அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசு காலதாமதம் செய்வதால், தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. இதனால் முழு செலவையும் மாநில அரசே ஏற்கும் சூழலும் உள்ளது. சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோயம்புத்தூரில் மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும். பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும். சென்னை கோடம்பாக்கம் - பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவை 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்” எனத் தெரிவித்தார்.