மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்துவருவதாகவும், விவசாயிகளின் குரலுக்கு செவிமடுக்க மறுப்பதாகவும் தொடர்ந்து விவசாயிகள் குற்றம்சாட்டிவருகின்றனர். டெல்லியில் போராடிக்கொண்டிருக்க கூடிய விவசாயிகளின் குரலைக் கேட்க மத்திய அரசு இதுவரை தயாராக இல்லை. அவர்கள் ஒருபக்கம் செவிமடுக்க மறுத்தாலும், மத்திய அரசு என்ன நினைத்ததோ அதைச் செயல்படுத்த தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. எனவே மத்திய அரசின் நிலைப்பாட்டைக் குறித்து கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சாலையில் அமர்ந்தும், சாலையில் உருண்டும் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை விவசாயிகள் பதிவுசெய்துவரும் நிலையில், அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், “மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என்று தொடர்ந்து விவசாயிகளாகிய நாங்கள் வலியுறுத்திவருகிறோம். ஆனால் மத்திய அரசு அதைக் காதில் போட்டுக்கொள்வதாக தெரியவில்லை. அணை கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் உரிய இடத்திற்கு தற்போது கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நடைபெறுவதைப் பார்த்தால் அரசு அனுமதி அளித்துவிடும் என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தென்பெண்ணையாற்றில் தடுப்பணையைக் கட்டி முடித்துவிட்டார்கள். உடனடியாக அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அதேபோல் விவசாயிகளுக்கான சமூகநீதி என்று பேசும் மத்திய அரசானது சாதிவாரியான கணக்கெடுப்பை எடுத்து, அதன் பின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தற்போது விவசாயிகள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.