Skip to main content

காவிரி நதிநீர் விவகாரம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவு!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Cauvery water issue; CM MK Stalin action decision

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று (14.07.2024) அனைத்து கட்சி கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “காவிரியில் நீர் இருப்பின் தற்போதைய நிலவரத்தைக் கருத்தில் கொண்டு கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து நாளை (அதாவது இன்று) முதல் 8 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்திற்குத் திறக்க முடியாது. இந்த மாதம் இறுதிவரை தினமும் ஒரு டிஎம்சி என மொத்தமாக 20 டிஎம்சி நீர் திறக்க வேண்டுமெனக் காவிரி ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம்” எனத் தெரிவித்திருந்தார். இதன் மூலம் ஜூலை 12 முதல் 31 வரை தினமும் 1 டிஎம்சி (11 ஆயிரத்து 500 கன அடி) தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவைக் கர்நாடக அரசு ஏற்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Cauvery water issue; CM MK Stalin action decision

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி 2018 ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின் படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடி நீரைப் பெற்றது.

தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆணையிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும். 

Cauvery water issue; CM MK Stalin action decision

இன்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், வரையறுக்கப்பட்டுள்ள காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைப்பின் ஆணையின்படி நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன். இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்