Skip to main content

காவிரி விவகாரம்: தி.மு.க., கூட்டணி கட்சிகள் இன்று மனிதச் சங்கிலி போராட்டம்!

Published on 23/04/2018 | Edited on 23/04/2018


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துகின்றன.

காவிரி விவகராம் தொடர்பான வழக்கில், மார்ச் மாதம் 29-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தாமதப்படுத்தி வருவதால் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் வலுத்தன.

இதைதொடர்ந்து இம்மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் என பல தரப்பினரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 16-ந் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கிறது. மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒரு மணி நேரம் இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டையில் நடைபெறும் மனிதச்சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர்.

சார்ந்த செய்திகள்