டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் உடனடியாக உத்தரவு பிறப்பிப்பது கடினம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தி ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வழக்கின் விசாரணை நடைபெறுவதாக இருந்த நிலையில், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் வழக்கின் விசாரணை 21 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதி பி.ஆர். கவாய் அடுத்த வாரம் முழுவதும் எனக்கு வேறு பணிகள் இருக்கிறது. மூன்று பேர் அடங்கிய அமர்வுதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இரண்டு பேர் கொண்ட அமர்வு விசாரிக்க முடியாது என்று கூறிய தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார். மேலும், அவசரம் என்றால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நீங்கள் முறையிடலாம் என்று தெரிவித்துள்ளார்.