Skip to main content

'தமிழகம் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது'-பாமக ராமதாஸ்

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
nnn

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில்,'சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட சமூக நீதி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என என்.டி.ஏ கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் பாஜகவிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் பதவியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அலங்கரிப்பது எளிதான ஒன்றல்ல. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மட்டும் தான் இதுவரை அப்பெருமையை பெற்றிருந்தார். எளிய குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, நேருவுக்கு அடுத்தபடியாக அந்த சாதனையைப் படைத்துள்ள இரண்டாவது பிரதமர் ஆவார்.

இந்தியாவின் பிரதமராக இருமுறை பதவி வகித்த நரேந்திர மோடி, பொருளாதாரம் சார்ந்த பல்வேறு துறைகளில் துணிச்சலான முடிவுகளை எடுத்திருக்கிறார். அதன் பயனாக உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அடுத்தக்கட்டமாக அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பொருளாதார வல்லரசு என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. இந்த இலக்கையும் மோடி நிச்சயம் வென்றெடுப்பார்.

மூன்றாவது முறையாகத் தொடர்ந்து பிரதமர் பதவியை வகிக்கும் நரேந்திர மோடியிடமிருந்து இந்த நாடு, குறிப்பாக தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட சமூகநீதி சார்ந்த நடவடிக்கைகள், மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும்  உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைகளில் மாநில ஒதுக்கீடு வழங்குதல்,  நீட் விலக்கு  உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளை அதிகரித்தல் போன்றவை சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது. அதை கண்டிப்பாக மத்திய அரசு செய்யும் என்று நம்புகிறேன்' எனவும் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்