Skip to main content

வேட்பாளர்களின் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வழக்கு தாக்கல்..!

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

High Court orders Election Commission to upload candidates' documents on website

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, மே 2ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. அதேபோல கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்தலில் வேட்பாளர்களை அங்கீகரித்து அரசியல் கட்சிகள் வழங்கிய சான்றுகள், முடிவுகள் இன்னும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனக் கூறி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அவர் தனது மனுவில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர, முடிவுகள் வெளியானதில் இருந்து 45 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த அவகாசம் ஜூன் 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர, அவர்களைத் தங்கள் கட்சி வேட்பாளராக அங்கீகரித்து அரசியல் கட்சிகள் அளித்த சான்று மற்றும் முடிவுகள் குறித்த ஆவணங்கள் அவசியம் என்பதால் இந்த ஆவணங்களை ஜூன் 15ஆம் தேதிக்கு முன் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில், ஜூன் 14ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்