Skip to main content

யு.ஜி.சி வழிகாட்டுதல்படி அரியர் தேர்வுகளை எழுத உத்தரவிடக் கோரி வழக்கு!

Published on 04/09/2020 | Edited on 05/09/2020

 

 Case seeking order to write  exams as per UGC guidelines!

 

அரியர் மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தாக்கம் காரணமாக கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 26 -ஆம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களைத் தவிர்த்து, பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவித்தார்.

தமிழக உயர் கல்வித்துறையின் முடிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், தேர்வு ரத்து யு.ஜி.சி விதிகளுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை செயலாளருக்கு எந்த உரிமையும், அதிகாரமும் கிடையாது. பல்கலைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட் ஆகியவற்றிற்கு மட்டுமே தேர்வை நடத்தவும், ரத்து செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 27 -ஆம் தேதி யு.ஜி.சி தேர்வுகள் தொடர்பாக விதிமுறைகளைப் புறக்கணிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டவிரோதமானது.

தனித் தேர்வர்களுக்கான தேர்வை அறிவித்துவிட்டு, அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சியை அறிவிப்பது என்பது, தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது. கலை, அறிவியல், டிப்ளமோ, இன்ஜினியரிங், எம்.சி.ஏ. படிப்பவர்கள் மட்டுமே பலன் பெறமுடியும். சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் ஆகியோருக்கு பாகுபாடு காண்பிக்கப்படுகிறது.

அரியர் தேர்வுகளைத் தள்ளி வைக்கவோ, தாமதப்படுத்தவோ முடியுமே தவிர, ரத்து செய்ய முடியாது. மாணவர்களின் எதிர்கால  நலனைக் கருதாமல், ஆகஸ்ட் 26-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். யு.ஜி.சி வழிகாட்டுதல்படி அரியர் தேர்வுகளை எழுத வேண்டுமென உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்