நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேநேரம் மறுபுறம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று ஆம்பூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அனுமதி பெறாமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கேள்வி எழுப்ப அவர்களுடன் மன்சூர் அலிகான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஏற்கனவே அனுமதி பெறாமல் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.