Skip to main content

 நடிகை கௌதமி புகார்; பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு 

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

Case registered against BJP member based on complaint filed by actress Gautami

 

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக அறியப்பட்ட கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில், நடிகை கௌதமி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் தனது 25 கோடி மதிப்பிலான சொத்துகள்  மோசடி செய்யப்பட்டதாக  புகார் அளித்திருந்தார்.

 

அதில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த, கட்டுமான நிறுவனம் நடத்திவரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது சொத்துக்களை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துக்களை அபகரித்துவிட்டனர். இது குறித்துக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.  

 

இந்த நிலையில் இன்று காலை நடிகை கௌதமி பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 25 ஆண்டுகாலமாக கட்சியிலிருந்து வருகிறேன்; ஆனால் எனக்கு கட்சி துணை நிற்கவில்லை. ஆனால் அழகப்பனுக்கு பாஜகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் உதவி செய்கின்றனர் என்று குற்றம் சாட்டிய கௌதமி, மிகுந்த மன வேதனையுடன் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து தற்போது, நடிகை கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தலைமறைவாக உள்ள அழகப்பன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்