Skip to main content

கொடநாடு வழக்கு; இ.பி.எஸ்., சசிகலாவை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 06/12/2024 | Edited on 06/12/2024
The case of Kodanadu High Court ordered to investigate EPS, Sasikala

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த வழக்கின் விசாரணை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கக் கோரி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீஸ், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. மற்றவர்களை விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி தீபு, சதீஸ், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் காணாமல் போன பொருட்கள் குறித்து சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு மட்டுமே தெரியும். புலன் விசாரணைக் குழுவினர் முழு விசாரணை மேற்கொள்ளவில்லை. முக்கிய குற்றவாளிகள் தப்பவிடப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் அமர்வில் கடந்த முறை (15.11.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சசிகலாவிற்குத் தொடர்பிருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த சம்பவம் நடைபெற்ற போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காரணத்தினால் நீதிமன்ற நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்தி, நீதிமன்ற சம்மன் அனுப்ப முடியாது என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது’ என வாதிட்டார். இதனையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கு தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இல்லையே?. அவரை ஏன் எதிர்த் தரப்பு சாட்சியாக விசாரிக்கக் கூடாது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.

The case of Kodanadu High Court ordered to investigate EPS, Sasikala

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (06.12.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வேல்முருகன் கீழமை நீதிமன்றம் பிறபித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும்  மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள 18 பேரையும் அதாவது எடப்பாடி பழனிசாமி, சசிகலா, அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்தவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் என அனைவரையும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்