
நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை பாஜக நிர்வாகி ஒருவர் அடாவடியாக மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் ஜன்னத் இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம் என்பவர் இரவு 11.30 மணியளவில் அரசுப் பணியின் போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும். மருத்துவருக்கு என்று சீருடை கிடையாதா? உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா என்று கேள்வி எழுப்பி அங்கு தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார். அப்போது பெண் மருத்துவர் அனுமதி இன்றி வீடியோ பதிவு செய்வது நாகரீகம் அல்ல என அவர் வீடியோ பதிவு செய்வதை மருத்துவரும் தனது செல்போனில் பதிவு செய்தார். இந்த இரு காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே ஹிஜாப் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூண்டி மருத்துவர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பலர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதனிடையே பெண் மருத்துவரை பணி செய்ய விடாமலும், அவரின் அனுமதி இன்றி வீடியோ பதிவு செய்த பாஜக நிர்வாகி மீது கீழையூர் போலீசார் 294 பி, 353, 298, 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.