மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இருப்பினும் இப்படம் வெளியான சமயத்தில் சோழர்கள் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பலரும் படத்திற்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர். இது தமிழ்த் திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிய மணிரத்னத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இயக்குநர் தன் சுயலாபத்திற்காக வரலாற்றைத் திரித்து, போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்துள்ளதாக’ மனுவில் குறிப்பிட்டுள்ளார்.