இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் என ஏமாற்றி பணம் வசூலித்த மாற்றுத்திறனாளியான வினோத் என்ற நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் கீழச்செல்வனூரை சேர்ந்தவர் வினோத். மாற்றுத் திறனாளியான இவர் அண்மையில் இந்திய சக்கர நாற்காலி (வீல் சேர் ) கிரிக்கெட் அணியின் கேப்டன் எனக் கூறிக்கொண்டு வலம் வந்துள்ளார். கடந்த மார்ச் 26 ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற போட்டியில் தனது அணி பாகிஸ்தானை வீழ்த்தி உலக கோப்பையை வென்றதாகக் கூறியதோடு, அங்கு வென்றதாக கோப்பை ஒன்றைக் காட்டி தமிழக முதல்வர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அமைச்சர் கண்ணப்பன் ஆகியோரை சந்தித்திருந்தார். இந்நிலையில் அந்த கோப்பையானது கடையில் வாங்கியது என தெரியவந்துள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட பாகிஸ்தான் செல்ல வேண்டும் எனக் கூறி பலரிடம் பணம் பெற்றதாகவும் அவர் மீது புகார் எழுந்த நிலையில், தற்பொழுது போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பேக்கரி உரிமையாளரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றிய புகாரில் தற்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.