அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு ஜூலை 11- ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட ஓ.பன்னீர்செல்வத்துக்கு அறிவுறுத்தியதோடு வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும்; அதுவரை தற்போதைய நிலை தொடரும்" எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நாளை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வர இருக்கிறது.இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது. வழக்கை வேறு நீதிபதிக்கு பட்டியலிட வேண்டும் என அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவர் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் தற்பொழுது தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது தலைமை நீதிபதி, ''ஒரு நீதிபதிக்கு முன்பாக இருக்கும் வழக்கை கடுமையான காரணம் இல்லாமல் வேறு நீதிபதிக்கு மாற்றுவது வழக்கமான நடைமுறை கிடையாது. இருந்தாலும் உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கிறேன். வைரமுத்து தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கையையும் பரிசீலிக்கிறேன். இந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் கருத்தை அறிந்து இந்த வழக்கை வேறு நீதிபதிக்குப் பட்டியலிடலாமா வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்'' என்றார்.