Car manufacturing plant at Ranipet;  The Chief Minister lays the foundation stone

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காகத் தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மேலும், அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக் கூடிய உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், பெருமளவிலான வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

Advertisment

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ. 6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி (13.03.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

அப்போது இதற்கான தொழிற்சாலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிட்டது. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) அடிக்கல் நாட்டவுள்ளதாக தொழில்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இங்கு ஜாகுவார், லேண்டு ரோவர் கார்களை தயாரிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மின்சார வாகனங்களையும் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.