Skip to main content

கட்டையன் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

 Captivation of a Katayan elephant by anesthetic injection

 

சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைக்கிராமத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கட்டையன் என்கிற காட்டு யானை கடந்த ஒரு வருடமாக உணவுக்காக பூதிக்காடு, செங்காடு மூலக்கடம்பூர் தொண்டூர் கடம்பூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட வனத்தையொட்டிய விவசாய நிலங்களில் புகுந்து சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது. மேலும், பயிர்களை நாசம் செய்து வரும் கட்டையன் யானையைப் பிடித்து வேறொரு பகுதியில் விட வேண்டும் எனவும் வனத்துறைக்கு விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கையும் விடுத்து வந்தனர்.

 

இந்நிலையில், கடம்பூர் வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானையைப் பிடிக்க மருத்துவக் குழுவும் வரவழைக்கப்பட்டது. அதேபோன்று காட்டு யானையைப் பிடித்து மற்றொரு வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறை சார்பில் ஓசூர் பகுதியிலிருந்து லாரியும் வரவழைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவக் குழு மற்றும் கடம்பூர் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் இணைந்து யானை செல்லும் வழித் தடங்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். காட்டு யானை சமதளமான விவசாய நிலங்களை ஒட்டி வரும்போது மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கத் தயார் நிலையிலிருந்தனர்.

 

இந்நிலையில், ஓசப்பாளையம் அடுத்த பெலுமுகை பகுதி விளைநிலங்களில், கட்டையன் யானை சுற்றித் திரிவதாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து வனத்துறை மற்றும்  கால்நடை மருத்துவக் குழுவினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வன மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர், கட்டையன் யானைக்கு 4 முறை மயக்க ஊசி செலுத்தினர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு யானை மயக்கமடைந்த நிலையில் கிரேன் மூலம் கயிறு கட்டப்பட்ட ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பவானிசாகர் அடுத்த தெங்குமரஹாடா வனப்பகுதியில் மங்களப்பட்டி எனும் அடர்ந்த வனப்பகுதியில் கட்டையன் யானை விடப்பட்டது. தற்போது கட்டையன் யானை நலமுடன் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் மலைப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை உயிரிழப்பு; அதிமுக கவுன்சிலரிடம் விசாரணை

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

hosur elephant incident forest department enquiry for admk counsilor

 

பெண் யானை உயிரிழந்தது தொடர்பாக அதிமுக கவுன்சிலரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த பால் நாராயணன் என்பவர் வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவருக்கு ஓசூர் அருகே உள்ள தாவரகரை என்ற கிராமப் பகுதியில் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த சூழலில் அதிமுக கவுன்சிலர் பால் நாராயணன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கோழிப் பண்ணையில் ஆழ்துளை கிணற்றுக்காக ஏற்படுத்தப்பட்ட மின்சார மோட்டாரில் பாதுகாப்பு இல்லாமல் வயர்கள் கீழே கிடந்துள்ளன.

 

இந்நிலையில் இங்கு நேற்றிரவு கூட்டமாக வந்த 10 யானைகளில் இருந்த 8 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இந்த வயர்களை கடித்து உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிமுக கவுன்சிலர் பால் நாராயணனிடம் பெண் யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

யானை தாக்கி கூலி தொழிலாளி பலி! 

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Person passes away by elephant

 

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அடுத்த கொத்தமங்கலம் அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் சின்ன ரங்கன் என்கிற சென்டான் (46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சென்டான் எப்போதும் அதே பகுதியில் தர்மன் என்பவர் தோட்டத்தில் பால் கறக்க செல்வது வழக்கம். அதேபோல் இன்று அதிகாலை 4.50 மணிக்கு இந்திரா நகரில் உள்ள தர்மன் என்பவரின் தோட்டத்திற்கு பால் கறக்க சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். 

 

அப்போது புதரிலிருந்து வெளியே வந்த யானை ஒன்று திடீரென சென்டானை தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்காக சென்டான் போராடி கொண்டிருந்தார். சத்தம் கேட்டு அவரது மகள் வந்து பார்த்தார். அப்பொழுது தந்தை நிலையைக் கண்டு  அருகில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் கார் மூலம் சென்டானை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.