Skip to main content

வனத்துறை சம்மன் குறித்து பேச முடியாது - ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி.

Published on 23/10/2022 | Edited on 23/10/2022

 

Can't talk about Forest Department summons - O.P.S. Son Ravindranath MP

 

தேனி மாவட்டத்தில் உள்ள  பெரியகுளம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள எம்.பி.ரவீந்திரநாத்திற்குச்  சொந்தமான தோட்டத்தில் உள்ள வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது.

 

இது தொடர்பாக தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் என மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

 

மேலும் தோட்ட உரிமையாளரான ரவீந்திரநாத் எம்.பி. உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், ரவீந்திரநாத் எம்‌.பி மீது விசாரணை நடத்த மக்களவை சபாநாயகருக்கு கடந்த வாரம் தேனி மாவட்ட வன அலுவலர் கடிதம் அனுப்பியிருந்தார்.

 

அதேபோல், சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு  ரவீந்திரநாத் எம்.பிக்கு வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இரண்டு வாரத்திற்குள் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளதாக தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா தகவல் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில், கொடைக்கானல் அருகே அமைந்துள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் முருகன் கோயிலில் ரவீந்திர்நாத் எம்.பி. சாமி தரிசனம் செய்தார். அப்போது கோயில் வளாகத்தினுள் அவரை அணுகிய செய்தியாளர்களிடம், “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்” என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது காரில் ஏறி புறப்பட சென்றபோது செய்தியாளர்கள், வனத்துறையின் சம்மன் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அதுதான்.. இப்ப அதை பேச முடியாது..” என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

 

 

சார்ந்த செய்திகள்