முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மாநகராட்சி டெண்டர்கள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாகவும், வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கீடு செய்ததாகவும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என வேலுமணி சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த விசாரணையில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, வேலுமணி மீதான புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி தரப்பில், இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 25 தேதிக்கு தள்ளிவைத்தனர்.