Skip to main content

பிஎம்டபிள்யூ காரில் சோதனை; அதிர்ச்சியான போலீஸ்

 

cannabis smugglers arrested in BMW car

 

தனிப்படை போலீசுக்கு கிடைத்த ரகசியத் தகவலை வைத்துக்கொண்டு, பிஎம்டபிள்யூ, ஃபார்ச்சூனர் போன்ற சொகுசு கார்களில் சைலண்ட்டாக கஞ்சா கடத்தி வந்த மர்ம கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சம்பவம் மதுரை மக்களை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை பெரிதும் கேள்விக்குறியாகி உள்ளது. அதே சமயம், இதனை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 

இதையடுத்து, அந்த வழியே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சொகுசு கார் ஒன்றை நிறுத்தி நோட்டமிட்டனர். அந்த சமயம், காருக்குள் இருந்த நபர்கள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் கார் முழுவதும் சோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது, காருக்குள் இருந்த மூட்டைகளில் 72 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் மதுரை கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுமட்டுமின்றி, பரமேஸ்வரன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் சேர்ந்துகொண்டு திருட்டு கார்கள் மூலம் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து மதுரையில் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து, பரமேஸ்வரன் அளித்த வாக்குமூலத்தின்படி, அவரிடம் இருந்த பிஎம்டபிள்யூ, ஃபார்ச்சூனர் உள்ளிட்ட 5 விலை உயர்ந்த சொகுசு கார்கள், 14 செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு தங்கச் சங்கிலி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, கஞ்சா மூட்டைகளோடு போலீசாரிடம் சிக்கிய பரமேஸ்வரன் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தற்போது தலைமறைவாக உள்ள விஜயலட்சுமியை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !