நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பட்டியலை இதுவரை இறுதி செய்யாமல் உள்ளன. இதனிடையே இன்று திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் திருச்சி உள்ள கலைஞர் அறிவாலயத்தில் 65 வார்டு வேட்பாளர்களுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், மநேம உள்ளிட்ட கூட்டணிகளுக்கு திமுக 14 கவுன்சிலர் சீட்டுகளை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதம் உள்ள 51 அல்லது 52 இடங்களில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து விட்ட நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் எப்போது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று திமுகவின் முதன்மைச்செயலாளரும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சி மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மகேஷ், வைரமணி ஆகியோருடன் ஆலோசனை முடிவு செய்து வேட்பாளர் பட்டியலை இன்று இறுதி செய்வார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்ட செயலாளர்கள் இருந்தாலும் வேட்பாளர் பட்டியலை பொறுத்தவரை அமைச்சர் நேருவின் முடிவே இறுதியாக இருக்கும் என்றே திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல் திருச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலும் இறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.