தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் முடிந்து மனுதாக்கல், தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வருகின்றன.
நேற்று (19.03.2021) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில், நேற்று 3 மணியோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 4,500-ஐ கடந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 4,567 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 3,818 ஆண்கள், 747 பெண்கள், 2 திருநங்கைகள் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 70 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை தற்பொழுது தொடங்கியது. தேர்தல் அதிகாரிகள் மனுக்களைப் பரிசீலிக்க உள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை மறுநாள் கடைசி நாள். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.