
நேற்று (28.01.2021) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் ஜெயலலிதாவின் 'வேதா இல்லம்', ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. அதேபோல் கடற்கரை காமராஜர் சாலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையும் திறந்து வைக்கப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கிடையே 'நம்ம சென்னை' என்ற செல்ஃபி மையத்தையும் தமிழக முதல்வர் நேற்று திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி சார்பில் இந்த 'நம்ம சென்னை' செல்ஃபி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
'நம்ம சென்னை' செல்ஃபி மையத்தில் நம்ம என்ற வார்த்தை தமிழிலும், சென்னை என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், நம்ம சென்னை செல்ஃபி மையம் தமிழ் மொழியை அவமதிக்கும் சின்னமாக இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மொழிக் கலப்புக்கு அரசே துணைபோகக்கூடாது. உடனே அந்த 'நம்ம சென்னை' செல்ஃபி மையத்தில் இடம்பெற்றுள்ள நம்ம சென்னை சிற்பத்தை முழுமையாக தமிழில் மாற்றிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.