
'ஆரம்ப சுகாதார நிலையங்களில் சரியான வசதிகள் இல்லை என்று கூறி மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது' என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
மருத்துவ மேற்படிப்பை முடித்தவர்கள் இரண்டு ஆண்டு காலம் தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதின் அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த 19 மருத்துவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற நியமனம் வழங்கப்பட்டது. இந்த நியமனங்களை ரத்து செய்துவிட்டு அரசு தலைமை மருத்துவமனையில் தாங்கள் பணி செய்ய பணிநியமனம் வழங்க வேண்டும்; அடிப்படை வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற முடியாது என அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
இன்று இந்த வழக்கானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் 'எட்டு பேருக்கு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மீதமுள்ள 11 பேருக்கு கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணி வழங்கப்பட்டிருக்கிறது. அங்கு பணியாற்ற ஒப்புக்கொண்டு தான் நியமனங்களுக்கு இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி, நோயாளிகள் மருத்துவர்களைத்தான் கடவுள் போல பாவிக்கிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். கிராமப்புறங்களுக்கும் மருத்துவம் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீதிமன்றத்தினை நாடி நேரத்தை செலவழிக்கக் கூடாது. ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கூறுவதை ஏற்க முடியாது எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தார். மேலும், வரும் பத்தாம் தேதிக்குள் 19 பேரும் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.