நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவது என அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து கட்சிக்கான கொடியை கடந்த மாதம் அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சிக்கான பாடலையும் வெளியிட்ட அவர் கட்சிக் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற திட்டமிட்டிருந்தனர். இதற்காக செப்டம்பர் 23ஆம் தேதி காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மாநாடு தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் மீண்டும் காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டு மற்றும் நிபந்தனைகளில் சில தளர்வுகள் அளிக்க வேண்டும் என த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் கேட்டுக் கொண்டார். அதனால் 33 நிபந்தனைகளில், கட்டாயம் 17 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டுமென காவல் துறை தெரிவித்தது.
இதையடுத்து மாநாட்டிற்கான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு சமீபத்தில் சில அறிவுரைகளை வழங்கினார் ஆனந்த். இந்த நிலையில் மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநாடு ஏற்பாடுகளை செய்வதற்கான குழுக்கள் அமைப்பது மற்றும் அதில் நிர்வாகிகளை தேர்வு செய்து அதற்கான பணிகளை எவ்வாறு பார்த்து கொள்வது, பின்பு மக்களை மாநாட்டிற்கு அழைத்து வர நியமிக்கப்பிட்ட குழு எவ்வாறு மக்களை அழைத்து வர வேண்டும் என பல்வேறு விஷயங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்பு ஆனந்த் நிர்வாகிகள் முன்பு உற்சாகத்துடன் பேசினார். அவர் பேசியதாவது, “இதுவே ஒரு சின்ன மாநாடு மாதிரி தான் இருக்கிறது. இதை பார்த்ததுமே பயமா இருக்குன்னு ஒரு நிர்வாகியிடம் சொன்னேன். ஆனால் பயப்பட தேவையில்லை. தளபதியின் முகம்... அந்த வார்த்தை நமக்கு போதும். நம்முடைய இலக்கு 2026. அதை அடைவதற்கு ஒவ்வொரு தொண்டர்களும் உழைக்க வேண்டும். நம்முடைய உயிர், மூச்சு, நாடி அனைத்திலும் தளபதி இருப்பார். சொன்ன ஒரு வார்த்தைக்காக இவ்வளவு கூட்டம் வருவது தளபதிக்கு மட்டும் தான் அமையும். வேறு யாராலும் எப்பேர்பட்டவர்களாலும் இந்த கூட்டத்தை கூட்ட முடியாது. நீங்கள் அனைவரும் தளபதியின் குடும்பம். 24 மணி நேரத்தில் எந்த ஒரு வேலையை கொடுத்தாலும் அதை உடனடியாக செய்யக் கூடிய வலிமை தமிழக வெற்றிக் கழகத்தினரிடம் இருக்கிறது” என்றார்.