தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரின் மெயின் சாலையில் பாத்திரக்கடை மற்றும் பழைய இரும்புக் கடை வைத்திருப்பவர் தங்கம். நேற்று முன்தினம் (06/08/2022) தங்கம் கடையிலிருந்த போது அரசு முத்திரை நம்பர் பிளேட்டுடன் கூடிய சொகுசு காரில் 5 பேர் டிப்டாப் உடையில் வந்திருக்கின்றனர். தங்களைப் போலீஸ் என்று கூறிக் கொண்டவர்கள் தங்கத்திடம் நீங்கள் டவரில் திருடிய பொருட்களை வாங்கியுள்ளீர்கள். புகார் உள்ளது விசாரிக்க வேண்டும் வாருங்கள் என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு தங்கம் சந்தேகப்பட்டு வர மறுக்க அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றனர்.
அவரது செல்போனை பறித்தவர்களின் கார் மதுரையை நோக்கி பறந்தது. இதில் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, அதே சமயம் மின்னல் வேகத்தில் தகவல் மாவட்ட காவல்துறை எஸ்.பி.யான பாலாஜி சரவணனுக்கும் போயிருக்கிறது. சற்றும் தாமதிக்காமல் துரித நடவடிக்கையிலிறங்கிய எஸ்.பி. கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் எஸ்.ஐ.க்களான சிலுவை அந்தோணி, அரிகண்ணன் தலைமையிலான 8 பேர்களைக் கொண்ட தனிப்படையை அமைத்து நடவடிக்கையை விரைவுப்படுத்தியிருக்கிறார்.
மதுரை நோக்கிச் சென்ற காரை விரட்டிய தனிப்படையினர் வழியோர டோல்கேட்கள், செக்போஸ்ட்களை அலர்ட் செய்தனர். இதனிடையே தொழிலதிபரைக் கடத்திச் சென்ற கும்பல் கரூர் பக்கம் காரை நிறுத்தி அவரின் கழுத்தில் கத்தியை வைத்தவர்கள், 20 லட்சம் உடனடியாகத் தர வேண்டும். இல்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்ட, மிரண்டுபோன அவரோ தன்னிடம் அவ்வளவு பணமில்லை. 5 லட்சம் தருவதாக தொழிலதிபர் பீதியுடன் கூறியிருக்கிறார்.
இதன்பின் அவரது செல்போன் மூலமாக அவரை அவரது மகன் செந்திலிடம் பேச வைத்தவர்கள் 5 லட்சம் கொண்டுவரக் கூறியுள்ளனர். அதன்படி தொழிலதிபரும் பேச, அவரது மகன் பணத்தை எங்கு கொண்டுவரவேண்டும் என்று கேட்டதில், விருதுநகர் பை-பாஸ் ரோட்டுக்குக் கொண்டுவரச் சொல்லி போனைத் துண்டித்தனர்.
அதன்படி கடத்தல்காரர்களும் விருதுநகர் பைபாஸ் ரோட்டுக்குவர, செந்திலும் பணத்துடன் அங்கு வந்திருக்கிறார். அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இருக்கவே பயந்துபோன கடத்தல்காரர்கள் விருதுநகர் தனியார் பள்ளிக்கு வரச் சொன்னவர்கள், பள்ளியருகே, செந்திலிடம் பணத்தைப் பெற்ற கும்பல் தங்கத்தைக் கீழே தள்ளிவிட்டுக் காரில் பறந்தனர். தனிப்படையினரும் கும்பலின் காரை விரட்டிச் சென்றனர்.
திருமங்கலம் டோல்கேட்டில் உள்ள தடுப்புகட்டையை உடைத்தெறிந்துவிட்டு கும்பலின் கார் பறந்திருக்கிறது. இதனால் டோல்கேட்டில் பரபரப்பு. இந்த நிலையில் கும்பலின் காரை பல கிலோமீட்டர் தொலைவு விரட்டிச் சென்ற தனிப்படையினர் கரூர் டோல்கேட்டிற்குத் தகவல் கொடுத்து குறிப்பிட்ட அந்தக் காரை மறிக்க, டோல்கேட்டின் குறுக்காக வரிசையாக லாரிகளை நிறுத்தி வைக்க விரைவுபடுத்த, இதனால் கரூர் டோல்கேட்டைக் கடக்க முடியாமல் தவித்த கும்பலின் காரை சேஸ் செய்த தனிப்படையினர் காரையும் கும்பலின் 5 பேரையும் சுற்றி வளைத்து தங்களின் கஷ்டடிக்குள் கொண்டு வந்தனர்.
அவர்களிடம் டி.எஸ்.பி. வெங்கடேஷ் விசாரணை நடத்தியதில் தொழிலதிபரைப் பணத்திற்காகக் கடத்தியது பெங்களூரைச் சேர்ந்த பரன்கவுடா, தாஸ், டேனியல், பவுல், பெரோஸ்கான் என்பதும் அவர்கள் காரில் போலி அரசு முத்திரையுடன் நம்பர் பிளேட் பொருத்தியிப்பதும் தெரியவந்தது. இதன்பின் கார் உட்பட பறிக்கப்பட்ட பணம் 5 லட்சம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த தனிப்படையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்திய எஸ்.பி.பாலாஜி சரவணன் 230 கி.மீ. தொலைவு விரட்டிச் சென்று கும்பலை வளைத்த தனிப்படையினரைப் பாராட்டியவர், இந்தக் கடத்தலின் பின்னணியிலிருப்பவர்கள் பற்றிய விசாரணையையும் விரைவுபடுத்தியிருக்கிறார்.