தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாகக் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது.
வானிலை ஆய்வு மையம் இன்று (21.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நாளை (22.05.2024) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதனைத் தொடர்ந்து இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக்கூடும். எனவே கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (21.05.2024) மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது' எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மழை பொழிவால் ஈரோட்டில் ஜவுளி வியாபாரம் மந்தமடைந்துள்ளது.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்). செயல்பட்டு வருகிறது. இங்குத் தினசரி கடைகள் மற்றும் வாரச்சந்தைகள் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் வாரச்சந்தைத் தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. திங்கட்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை வாரச்சந்தை நடைபெறும். இதற்காகக் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளைக் கொள்முதல் செய்து செல்வார்கள். திங்கட்கிழமை இரவு விடிய விடிய ஜவுளி சந்தை வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். மற்ற இடங்களை விட இங்கு துணிகளின் விலை மிகவும் குறைவு என்பதால் வியாபாரிகள் போட்டிப் போட்டு வாங்கிச் செல்வார்கள்.
பொதுமக்களும் அதிக அளவில் வந்து செல்வார்கள். கடந்த சில நாட்களாக ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரம் சுறுசுறுப்பு இல்லாமல் இருந்து வருகிறது. பாராளுமன்றத் தேர்தல் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் சற்று தொய்வாக இருந்தது. அதன் பிறகு கோடை வெயில் தொடங்கியதும் காட்டன் தொடர்பான துணிகள் வியாபாரம் நன்றாக இருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை எதிரொலியாக இன்று கூடிய ஜவுளி வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலும் வெளிமாநில வியாபாரிகள் மழை காரணமாக வரவில்லை. ஆந்திரா, கேரளாவில் இருந்து ஒரு சில வியாபாரிகள் மட்டும் வந்திருந்தனர். தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜவுளி வியாபாரிகள் இன்று சந்தைக்கு வரவில்லை. இதனால் இன்று மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. சில்லறை வியாபாரம் 25 சதவீதமும், மொத்த வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் ஓரிரு வாரங்களில் நிலைமை சீராகி ஜவுளி வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறும் என வியாபாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.